நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.

-என்பது வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு.

கொண்ட கொள்கையில் உறுதியும், ஆரவாரமில்லாத அமைதிப் பண்பும் கொண்டவர்கள் மலையை விடவும் உயரமானவர்கள் என்பது இதன் பொருள்.

இந்தக் குறள், நூற்றாண்டு காணும் மாமனிதராய், நமக்கிடையே வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் பொதுவுடைமைத் துறவி ஐயா நல்லகண்னு அவர்களுக்கு முற்றிலும் பொருத்தமானதாகும்.

ஆறடி மனிதர்கள், தங்கள் மோசமான பண்புகளால் உயரம் சுருங்கிப்போவதும் உண்டு. எல்லோரும் போற்றும் வகையிலான சிறந்த பண்புகளால் மலைச் சிகரங்களைவிட உயர்ந்து நிற்பதும் உண்டு.

ஐயா நல்லகண்னு அவர்கள், இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். அதனால் தான் அவர் மனிதர்களில் மாமனிதராய் உயர்ந்து நிற்கிறார்.

முத்தமிழறிஞர் கலைஞர், தன் கால்சட்டைப் பருவத்தில் தனது பொதுவாழ்க்கையைத் தொடங்கியதுபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களும் கால்சட்டை போட்ட 12, 13 வயதிலேயே தன் பொதுவாழ்க்கையை போராட்ட வாழ்க்கையாகத் தொடங்கிவிட்டார்.

அதனால், கலைஞர், ஐயாவின் 80 ஆவது பிறந்த நாள் விழாவில் வாழ்த்தியது நினைவுக்கு வருகிறது. அந்த விழாவிலே வாழ்த்திப் பேசிய கலைஞர்...

"கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் - சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு, வயதால் எனக்குத் தம்பி. தொண்டால் எனக்கு அண்ணன்' என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார். அதோடு, "தொண்டால் மூத்த அண்ணனை, வயதால் மூத்த இந்த அண்ணன் வாழ்த்துகிறேன்' என்றும் நகைச்சுவையோடு குறிப்பிட்டார்.

அத்தகைய பெருமைக்கு உரியவர்தான் ஐயா நல்லகண்ணு. பால்யம் மாறுவதற்கு முன்பே பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட ஐயா நல்லகண்ணு அவர்களின் பயணம், போராட்டங்களால் சிவந்த புரட்சி வீதியில், இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது தமிழகம் அடைந்திருக்கும் நற்பேறாகும்.

Advertisment

ss

ஐயாவின் உள்ளம் எப்படிப்பட்டது என்பதற்கும் ஒரு சம்பவம். கடந்த ஜனவரியில்,ஐயாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. உடனே அவர் அப்பல்லோ, ராமச்சந்திரா என்று போகவில்லை. வழக்கம்போல் நேராக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகிவிட்டார்.

இந்தத் தகவலை அறிந்ததும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு. , நேராக மருத்துவமனைக்குச் சென்று ஐயாவைப் பார்த்தார்.

Advertisment

அமைச்சரைப் பார்த்ததும் ஆர்வமாக எழுந்து உட்கார்ந்து கொண்ட ஐயா நல்லகண்ணு, தனக்கு கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவர் அமைச்சரிடம் என்ன சொன்னார் தெரியுமா?

"எங்க ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லை. அதனால் காலிப் பணியிடங் களைக் கொஞ்சம் நிரப்புங்க.ஜனங்க கஷ்டப்படறாங்க' என்று கேட்டார். இதைக்கேட்ட அமைச்சர், ஏற்கனவே அங்கே உள்ள காலி இடங்களை நிரப்பினோம். மீதமிருக்கும் காலி இடங்களையும் உடனே நிரப்பிவிடுகிறோம் என்று அங்கேயே உறுதிகொடுத்தார்.

இப்படி உடல்நலம் இல்லாத நேரத்திலும்கூட, தன்னைப் பற்றிக் கவலைப்படாமல், ஊரைப் பற்றியும் மக்களைப் பற்றியும் நினைத்துக் கிடக்கும் தாயுள்ளம் ஐயாவுடையது.

Advertisment

அதனால்தான் கடந்த 26-ஆம் தேதி, சென்னை தி. நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நடந்த ஐயாவின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட நம் தமிழக முதல்வர், அவர் மனதைப் புரிந்துகொண்டு, திருவைகுண்டம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, ஐயாவின் பெயரையே அதற்கு சூட்டுவதாக அறிவித்திருக்கிறார். இது அவரது தாய்மைப் பண்புக்குக் கிடைத்த கௌரவம்.

ஐயா அவர்களின் பொதுவாழ்வு தொடங்கியது எப்படி என்பதும், நினைவில் நிறுத்தத்தக்க ஒன்று.

*1938-ல் தூத்துக்குடி பஞ்சாலைத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை நடத்தினார்கள். அதனால் அவர் களுக்கு சம்பளம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. அதனால் அவர்கள் குடும்பம் பசி, பட்டினியில் வாடக்கூடாது என்று அவர்களுக்காக சிலர், வீடு வீடாகச் சென்று, ஒரு கைப்பிடி அரிசி கொடுங்கள் என்று, மக்களிடம் இருந்து அரிசியைத் திரட்டினார்கள்.இப்படி தொழிலாளர்களுக்காக அரிசியைத் திரட்டியவர்களில் கால்சட்டை போட்ட சிறுவனாக நம் ஐயா நல்லகண்ணுவும் இருந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 13.

* அடுத்து, அவர் பள்ளியில் படிக்கும்போதே "கலைத் தொண்டர் கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கி, அப்போதே மாணவர்களுக்காக உரிமைக்குரலை எழுப்பினார். சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் ஈடுபட்டார்.

*தனது 16 ஆம் வயதில் ஐயா, கம்யூனிஸ்ட் கட்சியில் சேரத் துடித்தார். ஆனால் வயது போதாது என்று அவரை சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டார்கள். 18 வயதில்தான் சேர்த்துக்கொண்டார்கள். உடனே, அவர்

as

"ஜனசக்தி' நாளிதழில் சேர்ந்து பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார் என்பது எங்களுக்கு இருக்கும் பெருமையாகும்.

அந்தக் காலகட்டத்தில் தமிழகத்துக்கு உணவு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 2 ஆயிரம் மூட்டை நெல் பதுக்கிவைக்கப்பட்டதை அறிந்து, அதை செய்தியாக ஜனசக்தியில் அம்பலப்படுத்தினார் ஐயா. அதைப் படித்த நெல்லை கலெக்டர் அந்த நெல் மூட்டைகளை உடனே பறிமுதல் செய்தார்.

அப்படி ஒரு புலனாய்வுச் செய்தியை அம்பலப்படுத்திய பத்திரிகையாளராக ஐயா நல்லகண்ணு திகழ்ந்தார் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

* கம்யூனிசம் தடைசெய்யப்பட்ட காலத்திலும்

அவர் அவர் அஞ்சாமல் செயல்பட்டார். அந்த வாலிபப்

பருவத்தில் பெரிய சைஸில் மீசையை வளர்த்து வந்திருக்

கிறார். நெல்லை சதி வழக்கில், அவர் கைதானபோது,

அவரை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், "உன் நண்பர்களை எல்லாம் காட்டிக்கொடு' என்று, விடிய விடிய தடிக் கம்பால் அடித்திருக்கிறார். ஐயா வாய் திறக்கவில்லை என்பதால், சோர்ந்துபோன அந்த இன்ஸ்பெக்டர், நெருப்பால் அவர் மீசையை சுட்டுப் பொசுக்கியிருக்கிறார். அவ்வளவு கொடுமையிலும் ஐயா வாயைத் திறக்கவில்லையாம். அத்தனை மன உறுதிகொண்டவர் அவர். அந்த சதி வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து 7 ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டு, அவ்வளவு சித்திரவதைகளையும் தாங்கியிருக்கிறார் ஐயா நல்லகண்ணு. அதன் பிறகும் அவருக்குப் பொது வாழ்க்கை கசக்கவில்லை என்பது தான் ஆச்சரியம். இப்படி அவரது போராட்ட வாழ்க்கையை எழுதிக்கொண்டே போகலாம்.

ஐயா நல்லகண்ணு அவர்கள்

* சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார்.

* நாங்குனேரியில் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தினார்.

* பொதுவீதியில் செருப்பணிந்து நடக்கும் போராட்டம் நடத்தினார்.

* கனிமவளக் கொள்ளைக்கு எதிராகவும் போராடினார்.

* தாமிரபரணி மணலைக் காக்க நீதிமன்றத்திலும் போராடினார்.

* விவசாயிகளுக்காகப் போராடினார்.

* பாட்டாளி மக்களின் உரிமைகளுக்காகவும் போராடினார்.

* நம்மோடு ஊடக சுதந்திரத்திற்காகவும் அவர் பலமுறை போராடினார்.

-ஒடுக்குமுறை எங்கே தென்பட்டாலும் அங்கே சென்று, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடினார் என்பது ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு இருக்கும் பெருமையாகும்.

*ஐயா, எதையும் தனக்காக வைத்துக் கொள்ளாத வர், எதன் மீதும் ஆசை இல்லாதவர். அவருக்கு கட்சியே ஒரு கோடி ரூபாயைக் கொடுத்த போது, இதை வைத்து நான் என்ன செய்யப் போறேன்? என்றபடி அதைக் கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்ட துறவி அவர். நமது தமிழக முதல்வர் கடந்த 2022-ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருதோடு கொடுத்த 10 லட்ச ரூபாயையும் ஐயா கட்சிக்கே கொடுத்துவிட்டார்.

* அதேபோல் ஐயா அவர்களுக்கு ஒரு காரைப் பரிசாகக் கொடுக்கவும் முயற்சி நடந்தது.

சான்றோர் பேரவை ஆனா ரூனா என்னும் அருணாச்சலத்தை யாரும் மறந்திருக்க முடியாது.ஐயா நல்லகண்ணு பேருந்துகளில், கூட்டத்தில் நசுங்கியபடியே பயணிப்பதை அவர் கவனித்திருக்கி றார். இதைத் தொடர்ந்து அவருக்கு ஒரு காரை வாங்கித் தர விரும்பியிருக்கிறார்.உடனே ஒரு டவேரா காரை வாங்கி,கவிஞர் இளவேனில் மூலம் தோழர் மகேந்திரனைத் தொடர்புகொண்டு, ஐயாவிடம் காரை ஒப்படைக்கவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதைக்கேட்டு திடுக்கிட்ட தோழர் மகேந்திரன், அன்பளிப்பாக அவர் எதைக்கொடுத்தாலும் ஏற்கமாட்டாரே என்று சொல்லியிருக்கிறார். "உடனே ஐயாவையே தொடர்புகொண்டிருக்கிறார் ஆனாரூனா. அவரிடம் என்ன ஏது என்று அன்போடு விசாரித்த ஐயா நல்லகண்ணு, உங்களுக்கு ஒரு காரை வாங்கியிருக்கிறேன் என்று ஆனா ரூனா சொன்னதும் பதட்டமாகி, என்னது காரா? எனக்கா? என்றபடி போனை வைத்துவிட்டாராம்.

எப்படியாவது ஐயாவிடம் காரைக் கொடுத்துவிடவேண்டும் என்று தவித்திருக்கிறார் ஆனாரூனா. அந்த நேரத்தில் ஐயாவின் பிறந்தநாள் விழா கலைவாணர் அரங்கிலே நடந்திருக்கிறது. கலைஞர்தான் சிறப்புவிருந்தினர். உடனே மேடைக்குச் சென்ற ஆனாரூனா, கலைஞரிடம் விசயத்தைச் சொல்லியிருக்கிறார். கலைஞரும் அவர் ஏற்க மாட்டாரே என்று தயங்கியிருக்கிறார். "பின்னர் ஐயாவுக்கு ஆனாரூனா கார் வாங்கியிருப்பது குறித்து மேடையிலேயே அறிவித்திருக்கிறார் கலைஞர்.

அடுத்து காரின் சாவியை தோழர் தா.பாண்டியனிடம் ஒப்படைத்திருக்கிறார்.'' கடைசியில் அந்தக் கார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம்தான் ஒப்படைக்கப்பட்டது.

இப்படி யார் எதைக்கொடுத்தாலும் யார் வழியாகக் கொடுத்தாலும், அதை ஏற்காத, எதன் மீதும் ஆசையே வைக்காத பொதுவுடமைத் துறவி யாகத் திகழ்கிறவர்தான் ஐயா நல்லகண்ணு.

இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்பதே நமக்குப் பெருமை தருவதாகும்.

-வணக்கத்தோடும் வாழ்த்துகளோடும்,

நக்கீரன்கோபால்